Wednesday, September 24, 2014

கர்நாடக இசை வித்துவான்களைப் பற்றிய விபரங்களை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வசதியாக இந்தத் தளம் செயற்படுகிறது.

கர்நாடக இசை தென்னிந்தியாவுக்கு உரியது. இந்த பூமிப்பந்தின் பல பாகங்களில் தென்னிந்தியர்கள் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். அதனால் கருநாடக இசையும் இப்போது பலப்பல நாடுகளில் வாழ்ந்து, வளர்ந்துகொண்டிருக்கிறது.

அக்காலத்தில் கர்நாடக இசை செவி வழியாக ஒரு குருவினிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொண்டார்கள். கற்றலுக்கு நேரமெல்லாம் கிடையாது. கற்கும் மாணவர் குருகுலவாசம் என்னும் முறைப்படி குருவின் வீட்டிலேயே வசிப்பார். வீட்டு வேலைகளில் பங்கேற்பார். எல்லாம் குருவின் கட்டளைப்படியே நடக்கும். குரு கற்பிப்பதை விட மாணவர் (தானாக) கற்றுக்கொள்ளுவதே அனேகமாக நடக்கும். குருவின் கச்சேரிகளை தவறாமல் கேட்க வேண்டும். மாணவரை குரு கண்காணித்த படியே இருப்பார். சில சமயங்களில், தேவையென அவர் கருதினால், குரு பாடம் நடத்துவார். கடுமையாக சாதகம் செய்யவேண்டும். இந்தமாதிரி பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே இன்றைக்கு நாம் போற்றிக்கொண்டிருக்கும் பெரும் வித்துவான்கள் உருவாகினார்கள்.

அத்தகைய வித்துவான்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் கருநாடக இசை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதிக பயன் பெறுவார்கள்.

இப்போது கர்நாடக இசை கற்றல், கற்பித்தல் முறைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. குருகுலவாசம் என்ற முறை தற்போது இல்லையென்றே சொல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் வாரத்தில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கூட வகுப்புகளைப் போல ஆசிரியரிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். குறிப்புகள் எடுத்துக் கொள்கிறார்கள். நவீன இலத்திரன் கருவிகள் மூலம் பதிவு செய்து பின்னர் கேட்டு தாமாக பயிற்சி செய்கிறார்கள். ஆசிரியர் ஒரு இடத்திலிருந்து சொல்லிக்கொடுப்பதை நெடுந்தொலைவிலிருக்கும் மாணவர் கற்றுக் கொள்ளும் வசதிகள் எல்லாம் இப்போ பெருகிவிட்டன.

கர்நாடக இசை வளர்ச்சிக்கு இவையெல்லாம் உதவிகரமாக உள்ளன. ஆனாலும் கருநாடக இசைக்கே உரித்தான கேட்போர் மனதை வருடி ஆறுதலளிக்கும் பாங்கு குறைந்து ஏனைய இசை நிகழ்ச்சிகள் போல சில பாடல்களை இசைப்பது என்ற நிலை உருவாகி வருவதாகவும் சிலர் கவலை தெரிவிக்கிறார்கள். நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு ராகம், தானம், பல்லவி பாடும் வழக்கம் அருகி வருகிறது. வித்துவானின் கற்பனா சக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அமையாமல் படித்ததை ஒப்புவிக்கும் பாணியும், பாடல்களை மனனம் செய்து அநுபவித்துப் பாடாமல் குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைத்து அதனைப் பார்த்துப் படிக்கும் வழக்கமும் பெருகி வருகின்றன.

தற்கால இசை உலகில் மரபு குறைந்துவிட்டது எனவும் மரபு இல்லாத கலை, களை எடுக்காத வயல் போல என செம்மங்குடி சீனிவாச ஐயர் சொல்லுவாராம்.1
புகழ் பெற்ற வித்துவான்களின் வரலாற்றைப் படிப்பதன் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடரவும் அதன் மூலம் கருநாடக இசை அதன் இயல்பு கெடாமல் வளர்ச்சியடையவும் வழி பிறக்கும் என்பது எமது நம்பிக்கை.

மேற்கோள்கள்

1. அன்றொரு நாள்: ஜூலை 25:I

வெளி இணைப்புகள்:
1. கருநாடக இசை வித்துவான்களின் படங்கள் தொகுப்பு